Published : 09 Aug 2022 06:50 AM
Last Updated : 09 Aug 2022 06:50 AM
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக லோகநாதன் சென்றுள்ளார். அப்போது நகைக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 281 பவுன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நகைக்கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் காலியான நகைப் பெட்டிகள் சிதறி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒயர்களை கொள்ளையர்கள் துண்டித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் பதிவான உபகரணங்களையும் கொள்ளைக் கும்பல் தூக்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது. எனினும், கொள்ளைக் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT