Published : 09 Aug 2022 07:14 AM
Last Updated : 09 Aug 2022 07:14 AM
கோவில்பட்டி: போலீஸ்போல் நடித்து கோவில்பட்டி வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த கர்நாடக கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பலர் கோவில்பட்டி காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம்(63). பழைய இரும்பு வியாபாரம் செய்கிறார். தங்களை போலீஸார் எனக்கூறிய சிலர் இவரை காரில் கடத்தினர். திருட்டு பொருட்களை வியாபாரி தங்கம் வாங்கியதாகவும், கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி பணத்தை பறித்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த டேனியல் எசெக்ஸ்(50), பெரோஸ் கான் (47), பவுல்ராஜ் (30), ஏசுதாஸ் (34), பாரூன்(29) ஆகிய இவர்கள் 5 பேரும், கரூர் அருகே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இத்தகவல் அறிந்து மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் திரண்டனர். தாங்களும் இக்கும்பலிடம் பணத்தை இழந்ததாக தெரிவித்தனர். அவரவர் ஊர்களிலேயே புகார் அளிக்குமாறு போலீஸார் கூறியதால் வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.
இக்கும்பல் பல்வேறு மாநிலங்களில் இரும்பு, செம்பு கம்பிகளைத் திருடி, பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதும், சில நாட்கள் கழித்து, போலீஸ் எனக்கூறி அதே வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாபாரிகளும் அச்சத்தில் புகார் தெரிவிக்காதது கடத்தல் கும்பலுக்கு வசதியாக இருந்துள்ளது.
மதுரையில் கடந்த ஆண்டு ஒரே நாளில் 3 வியாபாரிகளை கடத்தி அவர்களிடம் தலாரூ.20 லட்சம் வரை இக்கும்பல் பறித்துக்கொண்டு விடுவித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தனித் தனி குழுவாக பிரிந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது மொத்த விவரமும் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT