Published : 09 Aug 2022 07:15 AM
Last Updated : 09 Aug 2022 07:15 AM
திருவள்ளூர்: சோழவரம் அருகே ரவுடியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக, அவர்களது நண்பர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 2 பேரைத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரவுடி ரமேஷ் (24). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அரவிந்தன், உருளை வினோத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மது அருந்துவதற்காக ரமேஷை அழைத்துச் சென்றுள்ளனர். அருகில் உள்ள ஆட்டந்தாங்கல் பகுதியில் ஏரிக்கரை அருகில் அமர்ந்து அனைவரும் மது அருந்தினர்.
அப்போது, அரவிந்தன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரமேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சோழவரம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வீரராகவன், விஜய், வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் அரவிந்தனுக்கும், ரமேஷுக்கும் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இருப்பினும் அரவிந்தனும், ரமேஷும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். எனினும், முன்விரோத்தால் ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய அரவிந்தன் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தப்பியோடிய முக்கிய குற்றவாளியான அரவிந்தன், உருளை வினோத் ஆகிய இருவரை சோழவரம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரவிந்தன் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான முன்விரோதம் குறித்து முழுமையான தகவல் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT