Published : 05 Aug 2022 06:31 AM
Last Updated : 05 Aug 2022 06:31 AM
மும்பை: கடந்த 1929-ம் ஆண்டில் ‘மபேட்ரோன்’ என்ற ஊக்க மாத்திரை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத்திரை மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானி ஜி என்பவர் கடந்த 2003-ம் ஆண்டில் மபேட்ரோன் மாத்திரையில் புதிதாக சில ரசாயனங்களை சேர்த்து புதிய மாத்திரையை அறிமுகம் செய்தார்.
இந்த மாத்திரை சர்வதேச சந்தையில் ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் போதை விருந்துகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாத்திரையால் இளைய தலைமுறையினர் அழிவுபாதையில் செல்வதை உணர்ந்த பல்வேறு நாடுகள் அந்த மாத்திரையை தடை செய்தன. அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், இந்தியா உட்பட 53 நாடுகளில் இந்த மாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோதமாக இவை அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், நலாசூபாரா பகுதியில் செயல்படும் ஆலையில் மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு 700 கிலோ ‘மியாவ் மியாவ்’ மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,400 கோடியாகும். இதுதொடர்பாக மும்பையில் 4 பேரும், நலாசூபாராவில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
ஒரு கிராம் கோகைன் போதைப்பொருள் ரூ.5,000-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிராம் ‘மியாவ் மியாவ்’ மாத்திரை ரூ.500முதல் ரூ.1,000 விலையில் கிடைக்கிறது. இதன் காரணமாக மும்பைஉள்ளிட்ட பெரு நகரங்களில் ரகசியமாக நடைபெறும் போதை விருந்துகளில் இந்த மாத்திரை அதிகம் புழங்குகிறது.
‘மியாவ் மியாவ்’ மாத்திரையை தொடர்ச்சியாக உட்கொண்டால் மாரடைப்பு, ரத்த அழுத்தம், பார்வையிழப்பு, தூக்கமின்மை, உடல் எடை குறைவு, மனநல பாதிப்பு ஏற்படும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT