Published : 03 Aug 2022 11:59 PM
Last Updated : 03 Aug 2022 11:59 PM
நாமக்கல்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (26) பி.காம்., பட்டதாரி. வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்கான முயற்சியில் இருந்து வந்தார். வீட்டில் இருந்த சமயங்களில் சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
நாளடைவில் அந்த விளையாட்டிற்கு சுரேஷ் அடிமையாகியுள்ளார். அதேவேளையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார். இந்த தொகை முழுவதும் வெளிநாடு செல்வதற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கியது. அந்தப் பணத்தை முழுவதுமாக இழந்தால் மனமுடைந்த சுரேஷ் இன்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சுரேஷ் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் இருந்து மீளமுடியவில்லை எனவும், Bye Bye Miss U ரம்மி எனவும் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில், "ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனது மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT