Published : 27 Jul 2022 05:42 PM
Last Updated : 27 Jul 2022 05:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு ரோடு பிள்ளையார் திட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (49). இவரது மனைவி கவிதா (45). இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், மவுலீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு கவிதா வீட்டில் இருந்த புல் நறுக்கும் இயந்திரத்தில் புல் நறுக்கியபோது அவரது வலது கை மணிக்கட்டு அருகில் வெட்டுப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் லாஸ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது கையில் பிளேட் பொறுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து கையில் பொறுத்தியிருந்த பிளேட்டை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போது அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, கடந்த 20-ம் தேதி கையில் பொறுத்தப்பட்ட பிளேட்டை அகற்ற கவிதா ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து கையில் இருந்த பிளேட்டு அகற்றப்பட்டது. 24-ம் தேதி கவிதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் ஓய்வில் இருந்து வந்த கவிதாவுக்கு கையில் வலி அதிகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது தாயார் வசந்தா ஜிப்மர் மருத்துவமனையில் எழுதி கொடுத்த மருந்து சீட்டை எடுத்து சென்று ஜிப்மர் மருந்தகத்தில் ஊசி மருந்து வாங்கி கொண்டு வந்துள்ளார். பின்னர் கவிதாவை தானம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளினீக் அழைத்து சென்று தான் வாங்கி வந்த ஊசி மருந்தை மருத்துவரிடம் கொடுத்து கவிதாவுக்கு செலுத்த கூறியுள்ளார்.
அங்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் கவிதா மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் உடனே கவிதாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ மூலம் கவிதாவை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கவிதாவை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது மருத்துவர்கள் விசாரித்த போது கவிதாவுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தை உறவினர்கள் காண்பித்தனர்.
அதனை பார்த்த மருத்துவர்கள் வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஊசி மருந்துக்கு பதிலாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு செலுத்தப்படும் ஊசியை கவிதாவுக்கு செலுத்தியதால் அவர் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து கவிதாவின் கணவர் தேவநாதன் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் 'தனியார் கிளினிக் மருத்துவர் நாங்கள் வாங்கி கொடுத்த ஊசி மருந்தை சரியாக படித்து பார்க்காமல் கவனக்குறைவாக தனது மனைவி கவிதாவுக்கு செலுத்தியதால் மரணம் ஏற்பட்டது என்பது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவிதா இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT