Published : 25 Jul 2022 07:39 PM
Last Updated : 25 Jul 2022 07:39 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மணி நகரை 18 வயதான மாணவி விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மஸி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதால், தாயுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்தவர் முதல் பீரியட் வகுப்பை முடித்துக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். சற்று நேரத்தில் கழிவறைக்கு சென்ற மற்ற மாணவிகள், கீழே இம்மாணவி விழுந்து கிடப்பதை அறிந்தனர்.
இதனை அறிந்த கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கீழே விழுந்ததில் அவரின் இடுப்புக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே எஸ்.பி ஸ்ரீநாதா, டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் விக்கிரவாண்டி போலீஸார் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரின் உடையில் இருந்த கடிதம் ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் கண்டெடுத்தனர். மேலும், கழிவறை அருகே இருந்த குப்பைத் தொட்டியில் கசக்கி வீசப்பட்ட கடிதம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், 'எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது வந்தால் எல்லாம் மாறலாம்' என எழுதி அந்தக் கடிதத்துடன் மாணவி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து மாணவியுடையதுதானா? அப்படி என்றால், அவர் எழுதி வைத்துள்ள வாசகத்திற்கு என்ன அர்த்தம்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு போலீஸார் விடை தேடி கொண்டிருக்கின்றனர்.
மாணவி தற்போது சுயநினைவு இன்றி இருப்பதால் அவர் கண் விழித்த பிறகே மற்ற விஷயங்கள் குறித்து தெரிய வரும் என்பதால் மாணவி கண் விழிப்பிற்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி, மாணவியிடம் வாக்குமூலம் பெற வந்தார். அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதால் திரும்பிச் சென்றார். இது குறித்து விசாரணை நடத்த ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா, டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆட்சியர் (பொறுப்பு) பரமேஸ்வரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மாணவி தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொள்ள குதித்தாரா? யாராவது தள்ளிவிட்டார்களா? எப்படி கீழே விழுந்தார் என்ற கேள்விக்கு அவர் சுயநினைவு வந்தபின் கூறினால்தான் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT