Published : 21 Jul 2022 09:25 AM
Last Updated : 21 Jul 2022 09:25 AM

‘பிரீ பயர்’ கேம் தகராறில் தி.மலை அருகே பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்

தி.மலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெரிய கல்லப்பாடி அருகேயுள்ள அருந்ததியர் காலனி பகுதியில் உள்ள மாதா கோயில் அருகில் சிறுவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செல்போனில் ‘பிரீ பயர்’ என்ற கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள அண்ணாநகர் காலனி பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் உள்ளிட்ட சிலர் மாதா கோயில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

‘பிரீ பயர்’ விளையாட்டை சிறுவர்கள் கூச்சலிட்டபடி விளையாடியதால், ஆத்திரமடைந்த செந்தமிழ், சிறுவன் விக்னேஷ் என்பவரை தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் செந்தமிழ் மீது தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில், இரு தரப்பினர் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பொது மக்கள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், செந்தமிழ் தரப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று மாதா கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீடு, கடை மற்றும் அந்தப்பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பினர். இந்த தாக்குதலில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த காந்தி, சங்கீதா பிரபா, சபரி, முத்து உள்ளிட்ட 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர ராஜன் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், ரமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பெரிய கல்லப் பாடி கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமுல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். இரு தரப்பினர் மோதல் தொடர்பாக அப்பகுதியில் காவல் துறையினர் தொடர்ந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x