Published : 15 Jul 2022 04:25 AM
Last Updated : 15 Jul 2022 04:25 AM
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் இஎஸ்ஐ மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்த இளைஞர் பணியில் இருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டார். உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை கொலை செய்த பெண் விரிவுரையாளரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தர் ரதீஷ்குமார் (35). இவர் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த ரதீஷ் குமார், மாலையில் பெண் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்த பெண்ணே போன் மூலம் தகவல் அளித்ததை தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி, அந்த பெண்ணை பிடித்துவிசாரித்தனர். விசாரணையில் அவர் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஷிபா (37) என்பதும், கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியதும், முறையற்ற உறவை துண்டித்ததால் ரதீஷ்குமாரை அவர் கொலை செய்ததும் தெரிய வந்தது.
ஷிபாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவரை விவாகரத்து செய்தால் திருமணம் செய்து கொள்வதாக ஷிபாவிடம் ரதீஷ்குமார் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் கணவரை விட்டு பிரிந்துள்ளார். ஆனால், ரதீஷ்குமார் ஷிபாவை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரதீஷ்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷிபா இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வந்து மருந்தகத்தில் இருந்த ரதீஷ்குமாருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரதீஷ்குமார் மயங்கியதும், மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் அவரது உடலில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
ஷிபாவை ஆரல்வாய்மொழி போலீஸார் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரதீஷ்குமாரின் உடலை பார்த்து அவரது கர்ப்பிணி மனைவி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஷிபாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT