Published : 07 Jul 2022 09:00 AM
Last Updated : 07 Jul 2022 09:00 AM

நாகை அருகே 2 மீனவக் கிராமங்களுக்கு இடையே மோதல்: வீடு, வாகனங்கள் சூறை, 15 பேர் மீது வழக்குப் பதிவு

நாகை- நாகூர் பிரதான சாலையில் வெட்டாற்று பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மேலபட்டினச்சேரி மீனவக் கிராம பொதுமக்கள்.

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச் சேரி ஆகிய மீனவக் கிராமங்களுக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்றுவரும் நிலையில், இரு கிராமத்தினரிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் பேசி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றொரு சுரேஷ் உள்ளிட்ட சிலரை, ஒரு பிரிவு மீனவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள், நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டாற்று பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த, நாகை எஸ்.பி கு.ஜவஹர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மேலபட்டினச்சேரி மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, சாலை மறியல் குறித்து அறிந்த எதிர்தரப்பு மீனவர்கள் ஆயுதங்களுடன், மேலபட்டினச்சேரி கிராமத்துக்குள் நுழைந்து வீடுகளையும், வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

இத்தாக்குதலில் 2 பேர் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 2 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், எஸ்.பி கு.ஜவஹர் தலைமையில், அதிரடிப்படையினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x