Published : 28 Jun 2022 03:38 PM
Last Updated : 28 Jun 2022 03:38 PM
கரூர்: குளித்தலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் திருமணம் செய்த சிறுமியின் உறவினரான 25 வயதான ஜேசிபி ஆபரேட்டருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள புரசம்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவர் மனைவி பெரியக்காள். இவர்கள் மகன் சேகர் (25). ஜேசிபி இயக்குபவர். இவரது மாமா மகளான 13 வயது சிறுமி அவரது வீட்டில் தங்கி திருச்சி மேலப்புதூரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி சிறுமிக்கு பிறந்த நாள். இதையொட்டி சேகர் சிறுமிக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் அதேயாண்டு மார்ச் மாதத்தில் சேகர் மலேசியா செல்வதாக சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி நீ அங்கு சென்று வேறு யாரையாவது திருமணம் செய்துக்கொண்டால் நான் என்ன செய்வது எனக் கெட்டுள்ளார். உடனே சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிறுமியை சேகர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அதன்பின் வீட்டில் கூறிக்கொள்ளலாம் எனக்கூறி தாலியை சேகர் வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மலேசியாவிலிருந்து திரும்பிய சேகர் அதன்பின்னும் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்துக் கொண்டு விட்டேனே எனக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக்கூறி சிறுமியை அவரது ஊரான மனச்சனப்பட்டியில் விட்டுவிட்டு கடந்தாண்டு நவம்பர் 11 ஆம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து நவ. 17ம் தேதி சிறுமிக்கு தகவல் தெரிந்துள்ளது.
இது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து போக்சோ, சிறார் திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை நீதிபதி நசீமாபானு இன்று வாசித்தார். அதன்படி, போக்சோ (குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாது காக்கும்) சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், சிறுமியைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டயும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், சிறார் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத்தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்ண்டனையும் வழங்கி இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் சார்பில் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT