Published : 22 Jun 2022 09:05 PM
Last Updated : 22 Jun 2022 09:05 PM
மதுரை: தென்மண்டலத்தில் உள்ள நகரங்களில் கடந்த மூன்றரை மாதத்தில் 754 கஞ்சா வழக்குகளில் 1,238 வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்கள் உள்ளன. இங்கு, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 4 டிஐஜிக்கள், 10 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறையினர் செயல்படுகின்றனர். இங்கு சமீபத்தில் பொறுப்பேற்ற ஐஜி அஸ்ரா கார்க், சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். சட்டம், ஒழுங்கு, குற்றச் செயல்கள் தடுப்புடன், இளைஞர்களை பாழாக்கும் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் கஞ்சா தடுப்பு நடவடிக்கை விவரங்களை அந்தந்த எஸ்பிக்கள் மூலம் கேட்டு தெரிந்தும், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதனால் போலீஸாரும் கஞ்சா ஒழிப்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்றரை மாதத்தில் மதுரை மாவட்டத்தில் 130 கஞ்சா வழக்கில் 226 பேரின் வங்கிக் கணக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 103 வழக்கில் 200 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 77 வழக்கில் 116 வங்கிக் கணக்கும், தேனியில் 142 வழக்கில் 225 வங்கிக் கணக்கும், ராமநாதபுரத்தில் 32 வழக்கில் 72 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 17 வழக்கில் 30 வங்கிக் கணக்குகளும், நெல்லையில் 20 வழக்கில் 36 வங்கிக் கணக்குகளும்,
தென்காசியில் 34 வழக்கில் 31 வங்கிக் கணக்குகளும், தூத்துக்குடியில் 124 வழக்கில் 182 வங்கிக் கணக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 வழக்குகளில் 120 வங்கிக் கணக்குகளும் என, 754 வழக்குகளில் மொத்தம் 1,238 வங்கி கணக்குகள் தேசிய போதைப் பொருள் தடுப்பு சிறப்புச் சட்டத்தின்படி முடக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி, சேடபட்டி ஆகிய இடங்களில் 388 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் ரூ. 96 லட்சம் மதிப்புடைய சொத்துக்களும், திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் பட்டியில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் ரூ.1.8 கோடி சொத்துக்களும், தேனியில் 85 கிலோ கஞ்சா பறிமுதலில் வங்கிக் கணக்கு ஒன்றும் முடக்கப்பட்டுள்ளன.
தென்மண்டல காவல்துறையினர் தொடர் நடவடிக்கையால் பல்வேறு இடங்களில் கஞ்சா கடத்தல், விற்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. பெரிய வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகளும் தயங்கி மாற்றுத் தொழிலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் கஞ்சா புழக்கமும் குறைந்து, வழக்குகளும் குறைந்து வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியது: "இளைஞர்கள், மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி சீரழிக்கும் கஞ்சாவை ஒழிக்க தீவிரம் காட்டுகிறோம். முதல் கட்டமாக பெரியளவில் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வந்து விற்கும் நபர்களை குறி வைத்து, அவர்களின் சொத்துக்கள், உறவினர் களின் சொத்துக்களை சிறப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து, முடக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சிறு வியாபாரிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்காக தென்மாவட்டத்தின் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT