Published : 15 Jun 2022 06:36 AM
Last Updated : 15 Jun 2022 06:36 AM
கோவையில் வாகனம் நிறுத்துவது தொடர்பான முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோவை வடவள்ளி அருகே யுள்ள காளப்பநாயக்கன்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (18). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த டேனியல்.
கடந்த 2016-ம் ஆண்டுமார்ச் 27-ம் தேதி இருவரும் காளப்பநாயக் கன்பாளையம் பகுதியில் உள்ள அத்தனூர் அம்மன் கோயில் அருகே தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சரக்கு ஆட்டோவில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஆர்.சுப்பிரமணியன் (54) என்பவர், டேனியல் இருசக்கர வாகனத்தை நிறுத்தி யிருந்த அதே இடத்தில் தனது வாகனத்தை நிறுத்த வேண்டும், எனவே அவர்களது வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது, இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதனால் சுப்பிரமணியன் அவர்களை மிரட்டி சென்றார்.
அன்றைய தினம் மாலை, மணிகண்டன், டேனியல் மற்றும் அவரது உறவினரான ராஜ்குமார் ஆகிய மூவரும் அத்தனூர் அம்மன் கோயிலின் அருகேயுள்ள குளக்கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு தனது சரக்கு ஆட்டோவில் வந்த சுப்பிரமணியன், தான் கொண்டு வந்த உருட்டுக்கட்டையை எடுத்து தாக்குதல் நடத்தினார். மணிகண்டனின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டேனியலுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் ஓடி வருவதையறிந்த சுப்பிரமணியன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இவ்விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியனை வடவள்ளி போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், கொலை குற்றத்துக்காக சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் க.கார்த்திகேயன் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT