Last Updated : 14 Jun, 2022 01:46 PM

1  

Published : 14 Jun 2022 01:46 PM
Last Updated : 14 Jun 2022 01:46 PM

கும்பகோணத்தில் புதுமணத் தம்பதி கொலை: பெண்ணின் அண்ணன் உட்பட இருவர் கைது - நடந்தது என்ன?

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை, அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் பெண்ணின் அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31). இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இருவரும் வேலை பார்த்து வந்தபோது காதலித்துள்ளனர். இவர்களது காதலை பெண்ணின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர்.

பெண்ணின் உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 தினங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்த தகவலை சரண்யா தனது பெற்றோருக்கு தெரிவித்திருந்த நிலையில், சரண்யாவின் அண்ணன், மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக் கூறி வரவழைத்துள்ளார்.

இதை நம்பி இருவரும் இன்று சென்னையிலிருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். அன்று மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல் (31) மற்றும் சக்திவேலின் உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் (சரண்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை) இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் புதுமணத் தம்பதியை அரிவாளால் வெட்டியதில் அதே இடத்தில் இருவரும் இறந்தனர்.

இதுகுறித்து தகவலை பொதுமக்கள் சோழபுரம் போலீஸாருக்கு தெரிவித்தனர். பின்னர் சோழபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனிடையே, கொலை செய்த இருவரும் தலைமறைவாகினர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் சக்திவேல், ரஞ்சித் இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல், ரஞ்சித்

இந்த விசாரணையில், “சரண்யாவுக்கு முன்னரே எங்களது உறவினரான ரஞ்சித்துடன்தான் திருமணம் என்று வீட்டில் முடிவு செய்துவிட்டோம். இதற்கு சரண்யாவும் முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால், சென்னை சென்ற பிறகு அவர் மோகன் என்பவரை காதலிப்பதாகவும், வீட்டில் பார்த்த திருமணத்தை செய்து கொள்ள முடியாது என்று கூறி மோகனை திருமணம் செய்துகொண்டார். எங்களை ஏமாற்றியதன் காரணமாகவே இந்தக் கொலையை செய்தோம்” என்று சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x