Published : 08 Jun 2022 06:19 PM
Last Updated : 08 Jun 2022 06:19 PM
மதுரை: மதுரையில் கஞ்சா ஒழிப்பில் தீவிரம் காட்டி வரும் காவல் துறையினர் இப்போது அதிகரித்து வரும் போதை மாத்திரைகளின் புகழக்கத்தையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
மதுரை நகர், புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சாதாரணமாக கஞ்சா கிடைக்கும் சூழல் இருந்தது. மதுரையில் முக்கயமான கல்லூரி ஒன்றின் விடுதியிலேயே காவல்துறையினர் சமீபத்தில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்தனர். ரவுடிகள் போன்ற பழைய குற்றவாளிகள் கஞ்சா, மது, ஆன்ட்ராய்டு செல்போன்களை வாங்கி கொடுத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சூழலில் மாணவர்களும், வேலையில்லாத படித்த இளைஞர்களும் கஞ்சா வழக்கில் சிக்குகின்றனர்.
மாணவர்கள், இளைஞர்களை பாழாக்கும் கஞ்சாவை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என திமுக அரசு காவல்துறை யினருக்கு உத்தரவிட்டது. மேலும், கஞ்சா வியாபாரிகள், உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றியது. இதன்படி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தென் மண்டலத்தில் மதுரை மாவட்டத்தில் ரூ. 96 லட்சம், திண்டுக்கல் மாவட்டத்தில் 1.8 கோடி, தேனியில் ரூ. 23 லட்சம் மதிப்பு அசையும், அசையா சொத்துக்களும், இதுவரை தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனையைத் தடுக்க, இது போன்ற காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கஞ்சா புழக்கம் சற்று குறைந்திருக்கிறது என, காவல் துறையினர் தெரிவித்தாலும், போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்திருக்கிறது.
ஒரு சில நோய்களுக்கு வலி நிவாரணியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி போதைக்காக கூடுதல் விலைக்கு சிலர் விற்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து, நடமாடும் மருந்து விற்பனையில் தொடர்புடைய சிலர் செயல்படுவதாகவும், ஏற்கெனவே மருத்துவரின் உரிய பரிந்துரையின்றி போதை அளிக்கும் மாத்திரைகளை விற்றதாக சில மருத்துக் கடைகள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க, போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தீவிர குற்றத்தடுப்பு தனிப்படையினர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடந்த 7-ம் தேதி இரவு ரோந்து ஈடுபட்டபோது, அனுப்பானடி பகுதியில் மயங்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். போலீஸார் விசாரணையில், அவரது பெயர் ஜாம் நிகேதன் (21) என தெரிந்தது. அவரிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவரிடம் விசாரித்தபோது, அணணாநகரைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி பாலசுப்ரமணியன் (23), தென்காசி மாவட்டம், புளியரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (23) ஆகியோரிடம் மாத்திரைகளை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்ற இருவரையும் பிடித்த தனிப்படையினர், அவர்களை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போதை மாத்திரைகளை இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை அளிக்கும் மாத்திரைகளை கூடுதல் விலைக்கு விற்றதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 400 மாத்திரைகள், 2 இரு சக்கர வாகனங்கள், 3 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய போதைப் பொருள் தடுப்பு குற்ற வழக்கில் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''எல்லா இடங்களில் கஞ்சா விற்பனை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது போன்ற நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா கிடைக்காமல் அலைவோருக்கு மாற்றாக போதை மாத்திரைகளை வாங்க திட்டமிடுகின்றனர். இவர்களை சிக்க வைக்க, மருந்துகள் விற்பனையில் தொடர்புடைய சிலர் வாய்ப்பை பயன்படுத்துகின்றனர்.
மருந்து கடைகளில் வலி நிவாரணியாக சில மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரை ஆவணத்துடன் எத்தனை மாத்திரைகள், யாருக்கு, எப்போது விற்கப்பட்டது என, ஆவணம் பராமரிக்க வேண் டும். மருந்து, மாத்திரை ஆய்வு பிரிவு அதிகாரிகள் ஒவ்வொரு மருந்துக் கடையிலும் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தொய்வு ஏற்படும் சூழலில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் சாதாரணமாக இளைஞர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. மருந்துக் கடைகளில் விற்க முடியாத சூழலில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூலமும் போதை மாத் திரைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT