Published : 02 Jun 2022 05:19 PM
Last Updated : 02 Jun 2022 05:19 PM

ஈரோடு | 16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை - பெற்றோர் உட்பட 3 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்தது தொடர்பாக பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சிறுமியை அழைத்துச் சென்று, கருமுட்டை தானம் செய்து, பணம் பெறப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் இந்திராணி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்திராணி தனது இரண்டாவது கணவர் சையது அலியுடன் சேர்ந்து முதல் கணவருக்கு பிறந்த 16 வயது மகளுக்கு 20 வயதைக் கடந்ததாக போலி அடையாள அட்டைகள் தயாரித்து அதன் மூலம் கருத்தரிப்பு மையங்களில், பலமுறை கருமுட்டைகளைத் தானமாகக் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது.

இதனிடையே, இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையது அலி இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், கருமுட்டைகள் தானமாக கொடுத்து பணம் பெற்றுத் தர இடைத்தரகராகச் செயல்பட்ட மாலதி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவரின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து தப்பிய சிறுமி, சேலத்தில் உள்ள உறவினர்களிடம் தஞ்சமடைந்ததுடன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறி உறவினர்கள் உதவியுடன் பெற்றோரை கைது செய்ய நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x