Published : 27 May 2022 08:22 PM Last Updated : 27 May 2022 08:22 PM
போதிய ஆதாரம் இல்லாததால் ஷாருக் மகன் ஆர்யன் கான் விடுவிப்பு - போதைப் பொருள் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள்
மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிப்பு என தெரிகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட கப்பலில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது உறுதியானது. அதன்பேரில் கப்பலில் பயணித்த சிலர் கைது செய்யப்பட்டனர். அதில் ஆர்யன் கான், அவரது நண்பர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 20 பேர் அப்போது கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகே ஆர்யன் கானுக்கு பிணை கிடைத்தது. தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை முன்னெடுத்தது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு குறித்த 10 முக்கிய அம்சங்கள்
இந்த வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள 6000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் மொத்தம் 14 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 நபர்களில் ஒருவரான ஆர்யன் கான், குற்றவாளி என குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை.
ஆர்யன் கான் உட்பட இந்த வழக்கில் சிக்கிய ஆறு பேருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்துள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் சத்ய நாராயண் பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று வார காலம் சிறைவாசம் அனுபவித்திருந்தார் ஆர்யன் கான். அப்போது அது தலைப்பு செய்தியாக வெளியாகிக் கொண்டிருந்தது.
ஆர்யன் கான் போதைப் பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் என்றும், அதனை சப்ளை செய்து வந்தவர் என்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் இந்த வழக்கின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
சோதனையின்போது போதைப் பொருள் எதுவும் அவரிடம் இல்லை என ஆர்யன் கான் வழக்கறிஞர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை ஆர்யன் கானும் உறுதியாக சொல்லி வந்தார்.
வழக்கு விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பின் வாதத்தை கேள்வி எழுப்பி இருந்தது. குறிப்பாக வாட்ஸ்அப் மெசேஜை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சமீர் வான்கடே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆர்யன் கானை அவர் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. தொடர்ந்து மும்பை அதிகாரிகளிடமிருந்து டெல்லி அதிகாரிகள் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கெடு காலம் முடிந்த நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் கடந்த மார்ச் வாக்கில் கூடுதலாக இரண்டு மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது.
WRITE A COMMENT
Loading comments...