Published : 25 May 2022 06:13 AM
Last Updated : 25 May 2022 06:13 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்தவர் திரிவிக்கிரமன். இவரது மகள் விஸ்மயாவுக்கும் (22), சாஸ்தாங்கோட்டையைச் சேர்ந்த கிரண்குமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கிரண்குமார் கேரள அரசின் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக இருந்தார். விஸ்மயா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. திருமணத்தின்போது கிரண்குமாருக்கு வரதட்சணையாக ஒன்றே கால் ஏக்கர் நிலம், 100 சவரன் தங்க நகைகள், பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான கார் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் தனக்கு வழங்கிய கார் பிடிக்கவில்லை என்றும் புதிதாக வேறு கார் வாங்குவதற்கான தொகையை கூடுதல் வரதட்சணையாக வாங்கிவரச் சொல்லி விஸ்மயாவுக்கு கிரண்குமார் நெருக்கடி கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் விஸ்மயாவை தாக்கி உள்ளார். இதனால் ஏற்பட்ட காயங்களை புகைப்படம் எடுத்து தனது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். மேலும் இங்கே என்னால் இருக்க முடியாது என்றும் அழைத்துச் செல்லுங்கள் என்றும் தனது அப்பாவிடம் உருக்கமாகப் பேசி உள்ளார். இது நடந்த மறுநாளே (கடந்த ஆண்டு ஜூன் 21) கணவர் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார் விஸ்மயா.
இதுதொடர்பான வழக்கை கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்திய தண்டனை சட்டத்தின் 304 (வரதட்சணை மரணம்), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 498 ஏ(கணவர் அல்லது உறவினரால் பெண் கொடுமைக்குள்ளாதல்), வரதட்சணை தடுப்புச்சட்டம் பிரிவு 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் விஸ்மயா கணவர் கிரண்குமார் குற்றவாளி என நேற்று முன்தினம் நீதிபதி அறிவித்தார். தண்டணை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதன்படி, கிரண்குமாருக்கு 304(ஏ) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 306-வது பிரிவின் கீழ் 6 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 498(ஏ) பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் அபராதம், அந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மூன்று மாதங்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டும் எனவும், வரதட்சணை ஒழிப்புச் சடத்தின் 3-வது பிரிவின் கீழ் 6 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 18 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதைக் கட்டத் தவறினால் கூடுதலாக 15 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறப்பட்டது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதால் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.12.55 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு கடந்துவந்த பாதை
கடந்த செப்டம்பர் மாதம், விசாரணை அதிகாரிகள் இவ்வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் காவல் துறையால் 102 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ‘அச்சா (அப்பா) என்னால் இனியும் இங்கே இருக்க முடியாது’ என விஸ்மயா தனக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தன் தந்தையிடம் பேசும் ஆடியோ இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் கூறும்போது, ‘‘என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. விசாரணை அதிகாரிகளுக்கும், நீதித் துறைக்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்றார். அதேநேரம் ‘கிரண்குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும்’ என எதிர்பார்த்ததாக விஸ்மயாவின் தாய் கூறினார்.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு
கேரளாவில் அரசு ஊழியர்கள் மட்டத்தில் வரதட்சணை கொடுமை அதிகம் நிலவுவது விஸ்மயா மரணம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. விஸ்மயாவின் மரணத்துக்குப் பின்னர் கேரளாவில் அரசு ஊழியர்களின் திருமணத்தின்போது வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை தாங்கள் மணம் முடிக்கும் பெண்வீட்டார் கையெழுத்துடன் சமர்பிக்க வேண்டும் என்பது கட்டாயமானது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இதை சமூக தீங்காக முன்வைத்து வரதட்சணை கொடுமை செய்த கிரண்குமாரை அரசு பணியில் இருந்து நீக்கியது கேரள அரசு. கேரளாவில் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஸ்மயா மரணத்துக்குப் பின் ஆளுநர் மாளிகையிலேயே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார் ஆளுநர் ஆரிப் முகமதுகான்.
மன்றாடிய கிரண்குமார்!
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரண்குமார், நேற்று நீதிமன்றம் வந்ததுமே நீதிபதி கே.என்.சுஜித்திடம், ‘என் அப்பாவும், அம்மாவும் வயதானவர்கள். அப்பாவுக்கு ஞாபக மறதியும், அம்மாவுக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தமும் உள்ளது. நான் அவர்களை உடனிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் வயோதிகத்தை கவனத்தில் கொண்டு எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல் தீர்ப்பு பற்றி அறிந்துகொள்ள வந்த விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன், கிரண்குமாருக்கு வரதட்சணையாகக் கொடுத்த காரில் வந்தார். இந்த காரில் என் மகளின் ஆன்மா உள்ளது. தண்டனை விவரத்தைக் கேட்டு அவளது ஆன்மா திருப்தியடைந்திருக்கும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT