Published : 22 May 2022 04:00 AM
Last Updated : 22 May 2022 04:00 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்பனை கடையின் முன்புறம் உள்ள நடைபாதையில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் இரவு உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். அப்போது, மற்றொரு பெண் அவரை தடுத்த போது அவ ருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதையடுத்து கையில் கத்தியுடன் இருந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். படுகாயங்களுடன் இருந்த 2 பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு விசாரித்தனர். அதில், அவர் திருவண்ணாமலை இந்திரா நகரைச் சேர்ந்த மாடு வியாபாரி தேவேந்திரன் (45) என்றும் கத்திக்குத்து காயம்பட்டவர்கள் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கெளசர் (27) மற்றும் தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி (30) என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியின் முதல் கணவர் இறந்ததும் அவருடைய 2 பிள்ளைகளை வாணியம்பாடியில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளார். அவர் மட்டும் ஆம்பூர் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் நடைபாதையில் உறங்கியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன லட்சுமியை தேவேந்திரன் திருமணம் செய்துகொண்டுள்ளார். தி.மலையில் கணவருடன் இரண்டு மாதங்களே வாழ்ந்த நிலையில் அவரைப் பிரிந்து மீண்டும் ஆம்பூருக்கே வந்துவிட்டார். வழக்கம்போல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் யாசகம் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆம்பூருக்கு நேற்று முன்தினம் வந்த தேவேந்திரன், தனலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்த நிலையில் நள்ளிரவில் கத்தியுடன் சென்ற தேவேந்திரன் நேதாஜி சாலையில் கும்பலாக உறங்கிக்கொண்டிருந்தவர்களில் தனது மனைவி தனலட்சுமி என நினைத்து கெளசரை முதலில் கத்தியால் குத்தியுள்ளார். அவருக்கு பக்கத்தில் தனலட்சுமி இருப்பதைப் பார்த்ததும் அவ ரையும் தேவேந்திரன் கத்தியால் குத்தியது தெரியவந்தது.
ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கெளசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனலட்சுமி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெளசருக்கு 3 பிள்ளைகள் இருப்பதும், கணவர் இல்லாததால் அவரும் தனலட்சுமியைப்போல் பேருந்து நிலையங்களில் சுற்றிவருவதும் இரவு நேரத்தில் நடைபாதையில் கும்பலாக உறங்கியதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது சலசலப்பை ஏற்படுத்தியது. கெளசர் கொலை வழக்கில் ஆம்பூர் நகர காவல் துறையினர் தேவேந்திரனை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT