Published : 19 May 2022 12:57 PM
Last Updated : 19 May 2022 12:57 PM
தஞ்சாவூர்: பெங்களூருவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட குட்காவை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்த நிலையில், 3 டன் குட்காவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: தஞ்சாவூர் சரகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையிலான தனிப்படையினர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சொகுசு கார் ஒன்றை மடக்கிப் பிடித்து போலீஸார் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, குடோனில் இருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மூன்றுடன் அளவுடைய பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), தஞ்சாவூரை சேர்ந்த பக்காராம் (48), முஹமத் பாருக் (35), பன்னீர்செல்வம் (40), முத்துப்பேட்டையை சேர்ந்த சோழாராம் (41) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப் பதிவு விசாரித்து வருகிறார். இதனை டிஐஜி கயல்விழி பார்வையிட்டு, தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT