Last Updated : 17 May, 2022 11:54 AM

1  

Published : 17 May 2022 11:54 AM
Last Updated : 17 May 2022 11:54 AM

தி.மண்டபம் இருளர் பெண்கள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் மறுப்பு: காவல் ஆய்வாளர் தலைமறைவா?

பிரதிநிதித்துவப் படம்.

விழுப்புரம்: இருளர் பெண்கள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை ஆய்வாளரின் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றிற்காக திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார், தி.மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று திருக்கோவிலூர் போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ள 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இவ்வழக்கு விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய போலீஸார் 4 பேர் ஏற்கெனவே ஜாமீன் பெற்று விட்ட நிலையில் தற்போது அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன் மட்டும் ஜாமீன் பெறாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பான விசாரணை விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடைப்பெற்று வந்தது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், தனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்ததும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். “அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறதே” என்ற கேள்விக்கு, “அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியதால் தலைமறைவாகிவிட்டார் என்று கூறமுடியாது“ என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x