Published : 16 May 2022 05:05 PM
Last Updated : 16 May 2022 05:05 PM

OLX விளம்பரம், டெஸ்ட் டிரைவ், எஸ்கேப்... - 2,500+ ஐபி அட்ரஸை டிராக் செய்து கார் திருடரை கைது செய்த பெங்களூரு போலீஸ்

பெங்களூரு: ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை நூதன முறையில் திருடியவர் பிடிபட்டுள்ளார். சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து அவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஸ்மார்ட்போனில் அவரவர் நினைத்த பொருட்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் எளிது. அதற்கென இந்தியாவில் சில தளங்கள் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஎல்எக்ஸ். வாகனங்கள் முதல் அனைத்தும் இதில் வாங்கலாம், விற்கலாம்.

அந்தத் தளத்தில், தன்னிடம் உள்ள காரை விற்பனை செய்யும் நோக்கில் விளம்பரம் செய்துள்ளார் 47 வயதான ரவீந்திரா எல்லூரி. அவர் பொறியியல் வல்லுநர் எனத் தெரிகிறது. தன்னிடம் இருந்த மாருதி எஸ்.யூ.வி காரை ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார். அதற்கு சுமார் ஐந்து பேர் பதில் கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் தான் எம்.ஜி.வெங்கடேஷ் நாயக். ஆனால், அவர் குறித்த எந்த விவரமும் ரவீந்திரா அறிந்திருக்கவில்லை. கடந்த ஜனவரி 30 அன்று மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் நாயக். காரை வாங்க விரும்புவதாகவும், டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டுமெனவும் சொல்லியிருக்கிறார்.

அதன்படி அவரிடம் கார் சாவியை அன்றைய தினமே கொடுத்துள்ளார் ரவீந்திரா. வெகுநேரம் கடந்தும் காரை அவர் கொண்டு வராத காரணத்தால் சந்தேகமடைந்த ரவீந்திரா, போலீசில் அன்றே புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அவர் கொடுத்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த போன் வேறு ஒரு நபரிடமிருந்து திருடப்பட்டது என முதலில் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து நாயக்கை கடந்த 10-ஆம் தேதி கைது செய்துள்ளனர். அவருக்கு 36 வயது என தெரிகிறது. அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2020-இல் தனது மனைவி கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதனால் தான் கடனாளி ஆகிவிட்டதாகவும், அந்தக் கடனை அடைக்கவே களவுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • N
    Naranana Swamy

    கில்லாடிக்கு கில்லாடி. கர்நாடக காவல் துறையை ராமஜெயம் வழக்கில் பயன்படுத்தலாம்.

 
x