Published : 08 May 2022 04:00 AM
Last Updated : 08 May 2022 04:00 AM

இளைஞர் கொலை வழக்கில் கூலிப்படையினர் உட்பட 6 பேர் கைது: மனைவியிடம் பல்லடம் போலீஸார் தீவிர விசாரணை

திருப்பூர்

பல்லடம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கூலிப்படையினர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பல்லடம் போலீஸார் சென்று சடலத்தை மீட்டு விசாரித்து வந்தனர்.

இதில், மர்ம நபர்கள் கத்தியால் குத்தி இளைஞரை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்(35) என்பதும், கடந்த 10 ஆண்டுகளாக பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரான் காலனியிலுள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், மனைவி சுசீலா (30), 10 வயது மகன், 7 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில், பல்லடம் பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த மாரீஸ்வரன் (26) என்பவருக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த கோபால், மனைவி மற்றும் மாரீஸ்வரனை எச்சரித்துள்ளார். இதையடுத்து, கோபாலை கொலை செய்ய மாரீஸ்வரன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதன்குமார் (21), மணிகண்டன்(24) மற்றும் கூலிப்படையினரான திருச்சி மாவட்டம் குளித்தலையை சேர்ந்த வினோத் (28), லோகேஸ்வரன் (20), விஜய் (25) ஆகியோருடன் கோபாலை கொலை செய்ய மாரீஸ்வரன் திட்டமிட்டுள்ளார். இதற்காக கூலிப்படையினர் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளனர். சம்பவத்தன்று கோபால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின் குளித்தலை மற்றும் அருள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். வேறு யாரேனும்சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பாக மனைவியிடம் பல்லடம் போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x