Published : 06 May 2022 04:34 PM
Last Updated : 06 May 2022 04:34 PM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் நாகராஜூ என்ற பட்டியலின இளைஞர், முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ததற்காக, மனைவியின் உறவினர்களால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக் கொலை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் சரூர்நகர் பஞ்சல அருண் குமார் காலனியில் வசித்து வந்தவர் பில்லிபுரம் நாகராஜூ (26). கார் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். பட்டியலின இளைஞரான இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த செய்யது அஸ்ரின் சுல்தானா என்பவரை, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக தம்பதியரின் உயிருக்கு ஆபத்து இருந்து வந்ததால், அவர்கள் ஹைதராபாத்திலிருந்து வெளியேறி விசாகப்பட்டினத்தில் சிறிது காலம் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஹைதராபாத்திற்கு வந்து குடியேறினர்.
இந்த நிலையில், நாகராஜூ புதன்கிழமை இரவு தனது சகோதரியின் வீட்டில் இருந்த மனைவி செய்யது அஸ்ரின் சுல்தானாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே சுல்தானாவின் உறவினர்களால் அவரது கண் முன்பாகவே கடுமையாகி தாக்கிக் கொலை செய்யப்பட்டார். நாகராஜூவைத் தாக்கியவர்கள் இரும்புக் கம்பி,கத்தியால் அவரைத் தாக்கிக் கொலை செய்தனர். சரூர்நகரின் பரபரப்பான சாலையில் பொதுமக்கள் முன்பாக நடந்த இந்த கொலைத் தொடர்பாக, செய்யது மொபின் அகமது, முகம்மது மசூத் அகமது ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை குறித்து இறந்தவரின் மனைவியான சுல்தானா கூறும்போது, "சம்பவத்தன்று காலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்த தனது சகோதரியின் வீட்டில் அவருக்குத் துணையாக என்னை விட்டுவிட்டு நாகராஜூ வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிட வந்து வேலைக்குச் சென்றவர், மீண்டும் இரவு வந்து என்னை அழைத்து கொண்டு எங்களது வீட்டிற்குச் சென்றார். வழியில் இரண்டு பேர் எங்களை வழிமறித்து அவரைத் தாக்கத் தொடங்கினர். முதலில் தாக்கியது யார் என்று எனக்குத் தெரியவில்லை. நாகராஜூவைக் காப்பாற்ற தாக்கியவர்களை நான் தள்ளிவிட்ட போது என்னால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. என் அண்ணனும் அவனது நண்பனும் தான் என் கணவரைத் தாக்கியது. அந்தத் தாக்குதலின்போது சுற்றி நின்றவர்களிடம் நான் உதவி கேட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை. யாராவது உதவியிருந்தால் என் கணவர் நிச்சயம் உயிரோடிருந்திருப்பார்" என்று கூறினார்
முஸ்லிம் பெண்ணை மணந்ததற்காக அவரது உறவினர்களால், பட்டியலின இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மவுனமாக இருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறும்போது, "முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக, இந்து இளைஞர் நாகராஜூ, பெண் வீட்டாரால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். நாம் வாழும் சமூகத்தில் இதுபோன்ற வெறுக்கத்தக்க குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக சீரழிவுக்கும் வழிவகுத்து, மத நல்லிணக்கத்திற்கு கேடு உண்டாக்கும். நகரத்தில் இதுபோன்ற சமூக சீரழிவுகள் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அவரது கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு மவுனமாக அளித்து வரும் ஆதரவே இதுபோன்ற கொலைகள் அதிகரிப்பதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT