Published : 04 May 2022 08:13 PM
Last Updated : 04 May 2022 08:13 PM
லக்னோ: பாலியல் வன்கொடுமை புகாரளிக்கச் சென்ற 13 வயது சிறுமியை காவல் நிலையத்தின் காவல் நிலைய பொறுப்பாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியாக்கிய குற்றச்சாட்டுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள பாலி காவல்நிலையத்திற்கு, 13 வயது சிறுமி ஒருவர் தன்னை நான்கு பேர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது குறித்து புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவருடன் உறவினர் இருந்த நிலையிலும், அந்தக் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி (எஸ்ஹெச்ஓ) திலக்தாரி சரோஜ் என்பவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
ஏப்.22-ம் தேதி நான்கு சிறுமியை நான்கு பேர் போபாலுக்கு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி அந்தச் சம்பவம் குறித்து பாலி காவல்நிலையத்தில் தனது உறவினருடன் புகார் அளிக்கச் சென்றபோது மீண்டும் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம், காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியது. அவரது தலையீட்டின் பேரில், இது குறித்து செவ்வாய்க்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்பூர் மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பானு பாஸ்கர் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணிநேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய டிஐஜியிடம் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பாலி காவல்நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லலித்பூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறை அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் புல்டோசர்களின் சத்தத்தில் உண்மையான சட்டம் - ஒழுங்கு சீர்திருத்தங்கள் நசுக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. பெண்களுக்கு காவல் நிலையங்களிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் புகார் அளிக்க அவர்கள் எங்கு செல்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...