Last Updated : 03 May, 2022 04:44 PM

 

Published : 03 May 2022 04:44 PM
Last Updated : 03 May 2022 04:44 PM

புதுச்சேரியில் தொழிலதிபர் மனைவியிடம் 90 பவுன் மோசடி: நெருங்கிய தோழிக்கு போலீஸ் வலை

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் தொழிலதிபர் மனைவியிடம் 90 பவுன் மோசடி செய்த நெருங்கிய தோழியை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியது: புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை புது தெருவை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபரின் மனைவி விஜயலட்சுமி. இவரிடம் வாணரப்பேட்டையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரி படிக்கின்ற காலத்திலிருந்தே நெருங்கிய தோழியாக பழகி வந்துள்ளார்.

விஜயலட்சுமியின் குடும்பத்தில் ஒருவராக விஜயகுமாரி இருந்துள்ளார். விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகளை தானே முன்னின்று விஜயகுமாரி நடத்தி வந்ததால் அவர் மீது விஜயலட்சுமிக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி விஜயகுமாரி தனது மகளின் படிப்பு செலவுக்காவும், அவசர தேவைக்காகவும் விஜயலட்சுமியிடம் கடந்த 2018 -ம் ஆண்டு முதல் 2020 வரை சிறுகச்சிறுக 90 பவுன் நகை வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நகையை விஜயகுமாரி புதுச்சேரியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேறு ஒருவரின் பெயரில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பிறகு அந்த நகையை விஜயகுமாரி மீட்டு விஜயலட்சுமியிடம் கொடுக்கவில்லை. இது விஜயலட்சுமியின் கணவருக்கும் தெரியாது.

இதனிடையே, விஜயலட்சுமியின் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியதால் நகையை திருப்பி கொடுக்குமாறு விஜயகுமாரிடம் விஜயலட்சுமி கேட்டுள்ளார். ஆனால், நகையை திருப்பி கொடுக்காமல் விஜயகுமாரி காலம் கடத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக விஜயகுமாரியை, விஜயலட்சுமி போனில் தொடர்புகொண்டு நகையை திருப்பி கேட்ட போது அவர் சரியான காரணத்தை கூறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், விஜயகுமாரி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவானார். இதனால், நகை மோசடி செய்யப்பட்டதை அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்போலீஸார் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x