Published : 23 Apr 2022 09:26 PM
Last Updated : 23 Apr 2022 09:26 PM
கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில், மண்டல போக்குவரத்து இணை ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை பாலசுந்தரம் சாலையில், கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையரின் அலுவலகம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு, கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையராக, சவுரிபாளையத்தைச் சேர்ந்த உமாசக்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் உதவியாளர் ஒருவர் மூலம், அலுவலகத்துக்கு வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தனது காரில் வெளியே சென்று விட்டு, சவுரிபாளையத்தில் உள்ள கிருஷ்ணா வீதி வழியாக இன்று (சனிக்கிழமை) வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரு இடத்தில் உமாசக்தியின் காரை வழிமறித்து திடீர் சோதனை நடத்தினர்.
ரூ.28.35 லட்சம் பறிமுதல்: அப்போது, காரில் மறைவான பகுதியில் ஒரு பை வைக்கப்பட்டு இருந்தது. போலீஸார் அந்த பையைச் சோதனையிட்ட போது, அதில் ரூ.28.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இந்த தொகை எப்படி வந்தது என போலீஸார், இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தியிடம் கேட்டனர். அவரால் போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து போலீஸார் அவரை, பாலசுந்தரம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அலுவலகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும், இந்த பணம் எப்படி வந்தது, யார் கொடுத்தது என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அலுவலகத்தில் வைத்து உமாசக்தியிடம் சில மணி நேரங்கள் விசாரணை நடத்தினர். அவரால் ரூ.28.35 லட்சம் தொகைக்கான காரணத்தை தெரிவிக்க முடியாததால், அது லஞ்சமாக வாங்கிய பணம் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அந்த தொகையை பறிமுதல் செய்தனர்.
பிரத்யேக உதவியாளர் மூலம் வசூல்: அதேபோல், ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளரான செல்வராஜ் என்பவரை பிரத்யேகமாக நியமித்து, அவர் மூலம் பொதுமக்கள், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து லஞ்சமாக பணத்தை வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT