Published : 13 Apr 2022 06:51 AM
Last Updated : 13 Apr 2022 06:51 AM
கோவையில் இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த மருந்துக்கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகர காவல்துறைஎல்லைக்குட்பட்ட பகுதிகளில், கல்லூரி மாணவர்கள், இளைஞர் களை குறிவைத்து, வலி நிவாரண மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே, ரத்தினபுரி காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அந்நபர், கணபதி சுபாஷ் நகரைச் சேர்ந்த தனசேகரன் (28) என்பதும், மருந்துக்கடையில் ஊழியராக பணியாற்றி வருவதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை பயன்பாட்டுக்காக விற்பனை செய்துவந்ததும், தெரியவந்தது. அவரிடம் இருந்து 35 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த (8,400 மாத்திரைகள்) 7 கிலோ எடையுள்ள மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்டுள்ள தனசேகரன், ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகளை, போதை பயன்பாட்டுக்காக ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்துள்ளார்.
இம்மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறுநீரகம் செயலிழப்பு, இருதயக் கோளாறு, நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும். கைது செய்யப்பட்ட நபருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT