Published : 24 Mar 2022 08:32 AM
Last Updated : 24 Mar 2022 08:32 AM
விருதுநகர்: விருதுநகரில் 8 மாதங்களாக தொடர்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண், `181' என்ற எண் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஹரிஹரன் (27), அவரது நண்பர்கள் ஜீனத் அகமது (27), பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் `181' என்ற உதவி எண்ணை அழைத்து தனக்கு சிலர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளார். சமூக நலத்துறை விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு காவல்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
முதல்கட்ட விசாரணை நடத்திய போலீஸார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் ஹரிஹரனும் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளனர். நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகினர். தந்தை இல்லாததாலும் தாய் கூலி வேலைக்குச் சென்றதாலும் வீட்டில் தனியாக இருந்த நேரங்களில் இளம்பெண்ணும் ஹரிஹரனும் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.
ஒரு நாள் இருவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண்ணுக்கு ஏற்கெனவே தெரிந்த மாடசாமி, வீட்டுக்குள் வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வீடியோ காலில் இருந்த ஹரிஹரன் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு இந்த செல்போன் பதிவைக் காட்டி ஹரிஹரன் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
அப்போது அதையும் ஹரிஹரன் தனது செல்போனில் படம் பிடித்து வைத்ததாகத் தெரிகிறது. பின்னர், இந்த வீடியோ ஹரிஹரன் நண்பர்களுக்கும் அவர்கள் மூலம் தெருவில் தங்களுடன் வீடியோ கேம் விளையாடி வந்த சிறுவர்களுக்கும் கிடைத்துள்ளது. அதை வைத்துக்கொண்டு ஹரிஹரனைப் போல மற்றவர்களும் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 சிறுவர்களில் இருவர் சகோதரர்கள். ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
8 மாதங்களாக இவர்களது பாலியல் துன்புறுத்தல் தொடரவே, இதைத் தாங்க முடியாத இளம்பெண் இதுகுறித்து தனக்குப் பழக்கமான மாடசாமியிடம் கூறியுள்ளார். அவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததால் மனமுடைந்த இளம்பெண் `181' எண்ணை அழைத்துப் புகார் தெரிவித்தார். இந்த எண்ணைப் பயன்படுத்தி புகார் செய்ததன் மூலம் 8 மாத பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச் செயலில் ஈடுபட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதன் மூலம் விரைந்து விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபட்டோருக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT