Last Updated : 23 Mar, 2022 06:41 PM

 

Published : 23 Mar 2022 06:41 PM
Last Updated : 23 Mar 2022 06:41 PM

வேலூர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரிடம் பல கோணங்களில் விசாரணை தீவிரம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

வேலூர்: வேலூரில் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திரையரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரக் காட்சியை பார்த்த இளம்பெண் தன் நண்பருடன் திரும்பியபோது, அங்கு வந்த ஆட்டோவில் ஏறினார். அதில், ஓட்டுநருடன் 4 பேர் இருந்தனர். அவர்கள் பயணிகள் என ஆட்டோ ஓட்டுநர் கூறியதால் இளம்பெண் தன் நண்பருடன் அந்த ஆட்டோவில் பயணம் செய்தார்.

இளம்பெண் சொன்ன இடத்துக்கு செல்லாத அந்த ஆட்டோ வேலூர் சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டபோது கத்திமுனையில் இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கடத்திய அந்த கும்பல் பாலாற்றங்கரைக்கு கடத்திச்சென்று அங்கு ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் ஏடிஎம் கார்டை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பிறகு, ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அதிலிருந்து ரூ.40 ஆயிரம் பணம் எடுத்த அந்த கும்பல் அந்தப் பணத்தில் புதிய ஆடைகள் வாங்கியும், உயர்ரக மதுபானங்கள் வாங்கி செலவழித்தனர்.

இந்நிலையில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தகவல் வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தாமதமாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் குறித்து விவரங்களை சேகரித்த காவல் துறையினர், அவரிடம் இருந்து இணையதளம் மூலம் புகார் மனு பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தான் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடம் இருந்து பணம், நகையை பறித்து தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் மீது ஆயுதங்களுடன் சேர்ந்து அச்சுறுத்துவது, கடத்தி சிறை வைப்பது, கட்டாயப்படுத்தி கடத்தியது, அடைத்து வைப்பது, கூட்டுப் பாலியல் பலாத்காரம், தொடர் குற்றங்களில் ஈடுபடுவது, கூட்டுக் கொள்ளை, ஆயுதம் வைத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடயங்கள், ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

இளம்பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம்.

வேலூரில் இளம் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் செய்த 5 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் வெளியிட்டால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்பதால் அவர்களை பற்றி விவரம் தெரிவிக்க சாத்தியமில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இளம்பெண்ணை கடத்திய இந்த கும்பல் இவ்வளவு துணிச்சலுடன் முதன் முறையாக கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்னதாக இதேபோல் மேலும் பெண்களை இவர்கள் கடத்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழுந்துள்ளது.

இது குறித்து அவர்களது செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், பெண்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதேனும் உள்ளதா, அதைக் காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதா, அவர்கள் எண்ணில் இருந்து யாருக்கெல்லாம் அழைப்பு சென்றுள்ளது, அழைப்பு வந்துள்ளது, வாட்ஸ் அப் மெசேஜ் உள்ளிட்ட பதிவுகள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் பெண்கள் யாராவது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். நேரில் வர அச்சமடையும் பெண்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x