Published : 20 Mar 2022 04:15 AM
Last Updated : 20 Mar 2022 04:15 AM
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்தி (31). கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கரோனா சூழலால் சொந்த ஊரில் இருந்தபடி பணியாற்றி வருகிறார்.
சமூக ஊடகம் ஒன்றின் வழியாக சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு அறிமுகம் ஆன நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும், கார்த்தி பணியாற்றும் துறை தொடர்பான புராஜக்ட் ஒன்றை அவருக்கு வழங்க விரும்புவதாக தெரிவித்த அந்த நபர் கார்த்தியின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து சில நாட்களில் கார்த்தியின் வங்கிக் கணக்கில் ரூ.42 லட்சத்து 90 ஆயிரத்து 695 பணம் வரவாகியுள்ளது. இருப்பினும், அந்த தொகையை கார்த்தி எடுக்க முடியாதபடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த தொகையை கார்த்தியின் வங்கிக் கணக்கில் வரவு செய்ய வங்கி ஊழியர் எனக் கூறி போனில் பேசியவர், கார்த்தியின் வங்கிக் கணக்கில் வரவாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை எடுத்து பயன்படுத்த வேண்டுமெனில் வங்கிக்கான நடைமுறைக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ரூ.11 லட்சத்து 84 ஆயிரத்து 400 பணம் செலுத்துமாறு கார்த்தியிடம் கூறியுள்ளனர். இதை நம்பி பணம் அனுப்பிய கார்த்தி, அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
எனவே, தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கார்த்தி புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT