Published : 08 Mar 2022 04:15 AM
Last Updated : 08 Mar 2022 04:15 AM
இணையதளத்தில் இளைஞரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் பணத்தை மீட்டு, கிருஷ்ணகிரி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனேஸ்வர். இவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், அதிக லாபம் ஈட்டித் தருவதாக ரூ.70 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் மோசடி செய்த நபரின் வங்கிக் கணக்கை முடக்கி, ரூ.70 ஆயிரம் பணத்தை மீட்டனர்.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனேஸ்வரிடம், எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி ரூ.70 ஆயிரம் பணத்தை வழங்கி பேசியதாவது:
அறிமுகம் இல்லாத நபர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண், ஓடிபி எண் உள்ளிட்டவை கேட்டால் கொடுக்க வேண்டாம்.
மேலும் அதற்கான லிங்க் எதுவும் வந்தால் அதனைத் தொடாமல் தவிர்க்க வேண்டும். மேலும் போலியான ஆன்லைன் லோன் ஆப்-யை பதிவிறக்கம் செய்யாமல் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரக்கூடிய வாட்ஸ் அப் வீடியோ கால்களை புறக்கணிக்க வேண்டும்.
கூகுளில் கிடைக்கக் கூடிய வாடிக்கையாளர் சேவை எண்களை பரிசீலிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டாம். தவறுதலாக மேற்கண்ட வழிகளில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது https://www.cybercrime.gov.in என்ற இணைய தள முகவரியில் புகார் அளிக்கலாம்.
மேலும் சைபர் கிரைம் பிரிவை நேரில் அணுகலாம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT