Published : 01 Mar 2022 05:27 PM
Last Updated : 01 Mar 2022 05:27 PM
கரூர்: வேலி அமைக்கும் தகராறில் உறவினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமன் (61). இவர் மனைவி சின்னப்பொண்ணு (59). இவர்களது உறவினர் லட்சுமணன் (55). பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஆக.2-ம் தேதி ராமர் மற்றும் லட்சுமணன் இருவரிடையே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ராமன் கட்டையால் தாக்கியதில் லட்சுமணன் படுகாயமடைந்தார். ராமனின் மனைவி சின்னப்பொண்ணு இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து, பாலவிடுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த லட்சுமணன் அதே ஆண்டு அக். 6-ம் தேதி உயிரிழந்தார்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், நீதிபதி நசீமாபானு இன்று (மார்ச் 1ம் தேதி) வழங்கிய தீர்ப்பில், ராமன், சின்னப்பொண்ணு ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் சிறைத் தண்டனையும், ராமருக்கு ரூ.2,000, சின்னப்பொண்ணுக்கு ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT