Published : 28 Feb 2022 12:06 PM
Last Updated : 28 Feb 2022 12:06 PM
இறந்த தந்தையின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி, போலி செயலி மூலமாக பலரிடம் ரூ.1.80 கோடி வரை முறைகேடாக பணம் பறிந்த சென்னை இளைஞரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஸ்பிக் நகரைச் சேர்ந்த திலீபன் மனைவி ஐஸ்வர்யா. இவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி போலியான செல்போன் செயலி (TATA Investment App) மூலம் ரூ.24 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால், பணம் திருப்பிக் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஐஸ்வர்யா, தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரைப்போல தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் 13 பேர் அதே செயலி மூலம் ரூ.37,18,949 இழந்துள்ளதாக புகார் அளித்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட சிலரது தொகை சென்னையைசேர்ந்த கே.பி.சங்கர் என்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடந்த 2021 ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மட்டும் சுமார் ரூ.1.80 கோடி, அந்த வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால், போலீஸார் சென்னை சென்று விசாரித்தபோது, 2 ஆண்டுகளுக்கு முன்பே கே.பி.சங்கர் இறந்துவிட்டது தெரியவந்தது.
அவரது மகன் திருவான்மியூரைச் சேர்ந்த ச.ரோசன் என்பவர், அந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பிலிப்பைன்ஸில் வசிக்கும் தனது நண்பர் நேபாளி உத்தம் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரோசனை தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT