Published : 25 Feb 2022 05:49 AM
Last Updated : 25 Feb 2022 05:49 AM
தூத்துக்குடி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தா னேந்தலை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (61). இவரது தந்தை அம்பிகைநாதன் கடந்த 1964-ம் ஆண்டு முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிரையமாக வாங்கியுள்ளார். அதனை 1978-ம் ஆண்டு தனது மனைவி வள்ளித்தாயம்மாள் பெயரில் உயில் எழுதி கொடுத்துள்ளார்.
1991-ம் ஆண்டு வள்ளித்தாயம்மாள், தனது மகன்களான நடராஜப்பெருமாள், ஆதிநாராயணன், நமச்சிவாயம் ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் மீனாட்சிபட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அருணா சங்கர் (42) என்பவர், தனது நண்பர் ராமசாமி என்பவர் உதவியுடன், இறந்து போன தனது தந்தை முருகனை, அருணாசலம் என்று மாற்றி போலியாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்துள்ளார். அதன்பிறகு மோசடியாக ரூ.50 லட்சம் மதிப்பிலான, 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை நில புரோக்கர் ராமசாமியின் மனைவி ராஜேசுவரி என்பவருக்கு 17.10.2020 அன்று கிரையம் செய்துள்ளனர்.
தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்தி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில், அவர்களுக்குள் மாற்றி, மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தனது நிலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஆதிநாராயணன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி மேற்பார்வையில் ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அருணா சங்கரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT