Published : 22 Feb 2022 06:35 AM
Last Updated : 22 Feb 2022 06:35 AM
ஆனைமலையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆனைமலை - சேத்துமடை சாலையில், மாசாணியம்மன் கோயில் மண்டபம் எதிரே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ் என்கின்ற பரமேஸ்வரன் (27). இவர், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் வீதியில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணியாற்றி வந்தார். இவர் வசிக்கும் காம்பவுண்டில் 15 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில், இவரது அக்கா பரமேஸ்வரியும் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதில், பரமேஸ்வரிக்கும் அதே காம்பவுண்டில் வசித்துவரும் அகல்யா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அகல்யாவின் அம்மா பானுமதிக்கும், பரமேஸ்வரியின் தம்பி தினேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அன்று மாலை அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன், உறவினர் ராகவேந்திரன் மற்றும் நண்பர்கள் சிலர் தினேஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆனைமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தமிழ்ச்செல்வன் (32), ராகவேந்திரன் (24), கோகுல்குமார் (28), ஆண்டனி (29), ஸ்ரீஆகாஷ் (22), ராஜ்குமார் (23), மணிகண்டன்(23), கார்த்திகேயன்(20), பானுமதி(48) மற்றும் அகல்யா (25) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT