Published : 17 Feb 2022 04:02 PM
Last Updated : 17 Feb 2022 04:02 PM

திருட்டைத் தடுக்க முயன்ற மூதாட்டி கொலை; ஜார்க்கண்ட் மாநில குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது: தனிப்படை போலீஸார் நடவடிக்கை

சென்னை: அம்பத்தூரில் திருட்டைத் தடுக்க முயன்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜார்க்கண்ட் மாநில குற்றவாளியை 24 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர், அயப்பாக்கம்நெடுஞ்சாலை, டி.ஜி.அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரத் சந்திரன் (70). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நிர்மலா (64). சில தினங்களுக்கு முன்பு சரத் சந்திரன், தனது மூத்த மகளைப் பார்க்க படப்பை சென்றதால், நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நிர்மலா வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாககிடந்தார். தகவல் அறிந்த அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். மூதாட்டியின் சடலத்தை மீட்டு அதை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய ஆய்வாளர் ராமசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முதல் கட்டமாக தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நிர்மலாகொலை செய்யப்பட்ட நள்ளிரவுநேரத்தில் இளைஞர் ஒருவர் நிர்மலா வீட்டுக்குச் சென்று கைப்பையை எடுத்துக் கொண்டுஓடுவது தெரியவந்தது. இதையடுத்து நிர்மலா வீட்டை சோதனை செய்தபோது அங்கிருந்த செல்போன், கைப்பை, நெற்றிச் சுட்டி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீஸார் கண்காணிப்பு கேமராவில் பதிவானஉருவத்தை வைத்து விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், நேற்று மதியம் அம்பத்தூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் கொலை செய்யப்பட்ட நிர்மலாவின் செல்போன் இருந்தது தெரியவந்தது.

போலீஸார் அவரை அம்பத்தூர்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளைஞர் நிர்மலாவை கட்டையால் அடித்துகொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பிடிபட்ட இளைஞர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிராம் டுடூ (29). இவர் பிஎஸ்சி படித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்புவேலை தேடி சென்னை வந்துள்ளார். பட்டரைவாக்கத்தில் உள்ளதனியார் நிறுவனம் ஒன்றில் தற்போது ஊழியராகப் பணி செய்கிறார். சம்பவத்தன்று நள்ளிரவு பிராம் டுடூ மது போதையில் ஊரைச் சுற்றியுள்ளார். பின்னர், அவர் டி.ஜி. அண்ணா நகர் பகுதிக்கு வந்து, சரியாக பூட்டாமல் இருந்த நிர்மலா வீட்டுக்குள் சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து செல்போன், நெற்றிச் சுட்டி, கைப்பை ஆகியவற்றை திருடிவிட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது, சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நிர்மலா அவரைத் தடுத்து சப்தம் போட்டுள்ளார். உடனே பிராம்டுடூ அங்கு கிடந்த கட்டையை எடுத்து நிர்மலாவின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அவர் திருடிய பொருட்களுடன் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

கொலை நடந்த 24 மணி நேரத்தில், குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீஸாரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டி வெகுமதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x