Published : 15 Feb 2022 10:04 AM
Last Updated : 15 Feb 2022 10:04 AM

கடன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடி வரை மோசடி; தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்: காவல் துறையினர் விசாரணை

ஆம்பூரில் தனியார் நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆம்பூர்/வாணியம்பாடி

ஆம்பூர், வாணியம்பாடியில் வேலை வாய்ப்பு மற்றும் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துகொண்டு இரவோடு, இரவாக அலுவலகத்தை காலி செய்த தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம், படித்த இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகளுக்கான பயிற் கடன், தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்றுத்தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தது.

இதை, உள்ளூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் நம்பினர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் (லோன்) வாங்கி தருவதாக கூறி வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும் எனக்கூறி, மகளிர் குழுக்களிடம் தலா ரூ.1000 பெற்று வந்தனர். அதேபோல, இளைஞர்கள் வேலை கிடைக்க வேண்டுமென்றால் சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ஒவ்வொரு வரிடமும் தலா ரூ.1,350 பெற்றதாக கூறப்படுகிறது.

இதைநம்பி ஆம்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டி வந்தனர். கடன் தொகைக்கு ஏற்றவாறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை நிதி நிறுவனத்தினர் ரசீது கொடுத்து லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.

அதேபோல், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் இதே நிதிநிறுவனம் கிளை அலுவலகம் ஒன்றை திறந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வங்கி யில் கடன் பெற்று தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து வந்தனர். திருப்பத்தூர், நாட்றாம் பள்ளி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்நிறுவனத்தில் பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் சுமார் ரூ.4 கோடி வரை பணம் வசூலித்த தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தை மூடியது. சனி, ஞாயிறு விடுமுறையாக இருக்கும் என எண்ணிய பொதுமக்கள் நேற்று காலை ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு சென்ற போது அலுவலகம் மொத்தமாக காலி செய்து, ரூ.4 கோடி பணத்துடன் நிதி நிறுவனத்தினர் இரவோடு, இரவாக தலைமறைவானது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும், நிதிநிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள் அங்கு திரண்டனர். கட்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி நிதிநிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த, காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி, முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x