Published : 13 Feb 2022 01:15 PM
Last Updated : 13 Feb 2022 01:15 PM

கார் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்; விஷ ஊசிகளை செலுத்தி தொடர் கொலைகளை செய்த தம்பதி: நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவு; போலீஸ் விசாரணையில் அம்பலம்

கோவை

கோவை அருகே கார் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதி, விஷ ஊசி செலுத்தி தொடர்ந்து கொலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

கோவை மாநகர் தொண்டாமுத்தூர் சாலை ஓணாப்பாளையத்தில், கடந்த 9-ம் தேதி வெள்ளலூர் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் சானு (31) உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக, சந்தேக மரணம் பிரிவில் வடவள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், விஷ ஊசி செலுத்தி சானு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வாடகைக் கார் ஓட்டுநரை சவாரிக்காக அழைத்து வந்து, பணத்துக்காக அவரை கொலை செய்த தம்பதி ஸ்டீபன் (46), அமலோற்பவம் ஆகியோரை வடவள்ளி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களுக்கு உதவியாக ஓட்டுநரும், பெயிண்டரும் இருந்துள்ளதாக தெரிகிறது.

அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைதான தம்பதியிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "ஸ்டீபனின் சொந்த ஊர் சென்னை. எம்.காம் முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் நெட்வொர்க் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதுதவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். முன்னரே, இரண்டு பெண்களை திருமணம் செய்து, அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, வீட்டுக்கு வேலைக்கார பெண்ணாக வந்த அமலோற்பவத்துடன் அறிமுகமாகி உள்ளார். அமலோற்பவத்துக்கு திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபனுடன் சேர்ந்து, அமலோற்பவம் விஷ ஊசி போட்டு தன் கணவரை கொன்று விட்டு ஸ்டீபனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள், பணம் உள்ளவர்களை கொலை செய்து, அவர்களது பணத்தை திருடி வாழ்ந்து வந்தனர். ஸ்டீபன் மீது 4 கொலை வழக்குகளும், அமலோற்பவம் மீது இரண்டு கொலை வழக்குகளும் உள்ளன.

இவர்கள் பணப்புழக்கம் உடையவர்களை தொடர்புகொண்டு, தொழில் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி, தங்களது இடத்துக்கு வரவழைத்து விஷ ஊசி செலுத்தி அடுத்தடுத்து கொலை செய்து பணத்தை எடுத்துச் செல்வது வழக்கம். இவர்கள் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2015-ம் ஆண்டு இதேபோன்ற கொலை வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டனர். 4 மாதங்களுக்கு முன், கலிக்கநாயக்கன்பாளையத்துக்கு வந்து வீடு எடுத்து தங்கினர்.

அப்போது, வாடகைக் கார் ஓட்டுநர்கள் அந்த வாரத்தில் வரும் பணத்தை சேமித்து, வார இறுதியில் கட்டுவதை அறிந்தனர். அதன்படி, சம்பவத்தன்று சானுவுக்கு போன் செய்து, விமான நிலையத்துக்கு செல்ல வேண்டுமெனக் கூறி, ஓணாப்பாளையத்துக்கு வரவழைத்து கொலை செய்துவிட்டு பணத்தை திருடியுள்ளனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x