Published : 12 Feb 2022 12:59 PM
Last Updated : 12 Feb 2022 12:59 PM
கோவை: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கியில் ரூ.10.73 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், முன்னாள் மேலாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன்குமார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்தபுகாரில், ‘‘வங்கியின் சோமனூர் கிளை அலுவலகத்தில் சென்னைஅண்ணா நகரைச் சேர்ந்த ராஜேஷ்(48) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்,சோமனூரில் உள்ள ஒரு நூற்பாலையின்கீழ், 16 சிறியநூற்பாலைகள் செயல்படுவதாகவும், அவற்றை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ரூ.10 கோடியே 73 லட்சம் கடன் வழங்கியுள்ளார்.
கடந்த 11.3.2019 முதல் 26.8.2021 வரையிலான காலகட்டத்தில் இந்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு வழங்கப்பட்ட கடனுக்காக வட்டித் தொகை, அசல் தொகை எதுவும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, குறிப்பிட்ட முகவரியில் நூற்பாலைகள் எதுவும் இல்லை என்பதும், போலி ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக, மில்லின் நிர்வாகிகள் சோமனூர் கணேசபுரத்தைச் சேர்ந்த கனகராஜ்(39), துரைராஜ்(41), மகேஸ்வரி(34), செந்தில் நகரைச் சேர்ந்த ராதிகா (36), சம்பத்குமார் (40), சவுரிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(51), சேரன் மாநகரைச் சேர்ந்த ராஜூ(33) மற்றும் வங்கியின் முன்னாள் மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
7 பிரிவுகளின்கீழ் வழக்கு
இதையடுத்து மோசடி, கூட்டுச் சதி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் 8 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT