Published : 11 Feb 2022 07:11 AM
Last Updated : 11 Feb 2022 07:11 AM

வழிப்பறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: காவல் துறையினர் அலட்சியமாக உள்ளனர் என குற்றச்சாட்டு

வழிப்பறி கும்பலை கைது செய்யாததை கண்டித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை – மணலூர் பேட்டை சாலையில் வழிப்பறி கும்பல் மீது நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை – மணலூர் பேட்டை சாலையில் தொடர் வழிப்பறி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் இரவு முதல் அதிகாலை வரை சரக்கு வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை வழி மறித்து, கத்தியை காண்பித்து மிரட்டி பணம், செல்போன் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பறையம்பட்டு, பாவுப்பட்டு, தலையாம்பள்ளம், ஈரடி, காட்டாம்பூண்டி, பழையனூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தச்சம்பட்டு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலையில் பயணம் செய்யும்போது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு பிறகு, அச்சாலையில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இரு சக்கர வாகனத்தில் செல் பவர்களை, பின் தொடர்ந்து வரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மூலம் மோதி, வழிப்பறி கும்பல்கீழே தள்ளிவிடுகிறது. மேலும், சாலையின் குறுக்கே கல் மற்றும் மரக்கட்டைகளை திடீரென போட்டு, வாகனங்களை மறிக்கின்றனர். அப்போது நிலை தடுமாறி பொதுமக்கள் கீழே விழுந்துவிடுகின்றனர்.

அதன்பிறகு, கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து செல்கின்றனர். அதேபோல், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணமடை காப்புக்காடு பகுதியில் அதிகளவில் வழிப்பறி சம்பவம் நடைபெறுகிறது.

வழிப்பறி தொடர்பாக தச்சம் பட்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை. எங்களது புகார் மீது நடவடிக்கை எடுத்து வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யாமல், காவல்துறையினர் அலட்சியமாக உள்ளனர். மேலும், தி.மலை – மணலூர்பேட்டை சாலை மற்றும் கிராமங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதுவே வழிப்பறிக்கு அடித்தளமாக உள்ளன. காவல்துறையினர் தங்களது கண்காணிப்பு பணியை சரியாக மேற்கொண்டால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து மக்களும், வியாபாரிகளும் தப்பித்து கொள்ளலாம்” என்றனர்.

இந்நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘தி.மலை–மண லூர்பேட்டை சாலையில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவது, கண் காணிப்பு கேமரா பொருத்துவது, வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்வது’ என உறுதி அளித்தார். அதன்பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x