Published : 08 Feb 2022 12:23 PM
Last Updated : 08 Feb 2022 12:23 PM
கடலூர்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வடஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் சுதாகர். இவர், கடந்த 2016-ம்ஆண்டில் கொலை செய்யப் பட்டார். இது குறித்து ரோசனைகாவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், ஜெயக்குமார் (32) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த சுதாகரை, சொத்துக்காக அவரது சகோதரரான வழக்கறிஞர் ர.குமார் என்பவர் கொலை செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் கூலிப்படையாக செயல்பட்டு இச்சம்பவத்தை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
முருகன், ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ஜெயக்குமார், தான் வழக்கறிஞர் ர.குமாரால் மிரட்டப்படுவதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, கடலூர் மத்திய சிறையில் 2016-ம் ஆண்டு தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில், தனது தங்கையின் திருமணத்திற்கு பணம் தருவதாக தெரிவித்ததால் இந்தக் கொலையை தான் செய்ததாகவும், ஆனால், கூறியபடி பணம் வழங்காததோடு, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தன்னை கொலை செய்து விடுவதாக ர.குமார் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இந்த மிரட்டலால் தான் தற்கொலை செய்கிறேன் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து, கடலூர் முதுநகர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு கடலூர் சிபிசிஐடி போலீஸாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் வடஆலப்பாக்கம் கிராமத்தில் சிபிசிஐடி போலீஸாரால் வழக்கறிஞர் ர.குமார் (42) கைது செய்யப் பட்டார்.
கூலிப்படையாக செயல்பட்டவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தற்கொலை வழக்கிற்கு முந்தைய, சுதாகர் கொலை வழக்கு தொடர் பான விசாரணையும் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்து விடுவதாக மிரட்டியதால்தான் தற்கொலை செய்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT