Published : 03 Feb 2022 02:53 PM
Last Updated : 03 Feb 2022 02:53 PM

மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் வெள்ளியிலான படி சட்டம் திருடப்பட்ட புகார்: தீட்சிதர் உட்பட 2 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில், கடந்த 2014ம் ஆண்டு வெள்ளியிலான படி சட்டம் திருட்டுப்போனதாக கொடுக்கப்பட்ட புகாரில், பட்டர் மற்றும் தீட்சிதர் உள்ளிட்ட 2 பேரை தஞ்சை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உற்சவ மூர்த்தியை தூக்கிச் செல்ல பயன்படும் படி சட்டம். தோளுக்கு இனியான் என்று அழைக்கப்படுகிறது. இது மரத்தினால் செய்யப்பட்டு அதன் மேல் பாகத்தில் வெள்ளி தகடுகளால் கவசமிடப்பட்டிருக்கும்.

இதில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருட்டு போய்விட்டது. அதன்பின்னர் புதிதாக படி சட்டம் ஒன்று செய்யப்பட்டு, கோயிலில் வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக தஞ்சை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சென்னை கேகே நகர் வெங்கட்ராமன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 1ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீஸார்,கோவிலில் வேலைபார்த்த சீனிவாச ரெங்க பட்டர், முரளி தீட்சதர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், படிச் சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து எடுத்து விட்டு, அந்த வெள்ளியை உருக்கி வெள்ளி கட்டிகளை கொடுத்தும், மேலும் போதாதற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்தும் புதிதாக படி சட்டம் 15 கிலோ எடையில் செய்திருப்பது தெரியவந்தது.

தஞ்சாவூர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள வெள்ளித் தகடுகள்

உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீஸார், புதிதாக செய்யப்பட்ட படி சட்டங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீஸார் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x