Published : 02 Feb 2022 10:08 AM
Last Updated : 02 Feb 2022 10:08 AM

தன் மீதான குற்றத்தை மறைக்க நாடகம்: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

திருநெல்வேலி மாவட்டம் சுத்த மல்லியை சேர்ந்த வெயிலுமுத்து மனைவி பேச்சியம்மாள் (30). இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

சுத்தமல்லி காவல்துறையினர், தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எதிர் மனுதாரர்களுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும் பேச்சியம்மாள் அப்போது புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ப. சரவணன் சுத்தமல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டார். போலீஸார் நடத்திய விசார ணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. பேச்சியம்மாள் வீடு அருகே தமிழ்ச்செல்வி என்பவரது வீடு உள்ளது. இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பேச்சியம்மாள் கடந்த 30-ம் தேதி தமிழ்செல்விக்கு சொந்தமான இடத்தில் கழிவு நீர் குழாய் பதித்துள்ளார். இதை தமிழ்ச்செல்வியும், அவரது கணவரும் தட்டிகேட்டபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது பேச்சியம்மாள், அவரது கணவர் வெயிலுமுத்து, அவரது சகோதரி மாரியம்மாள் ஆகியோர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதுடன், கண்காணிப்பு கேமராவையும் உடைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தன்மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அறிந்த பேச்சியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மண்ணெண்ணெயை ஊற்றி நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பேச்சியம்மாள், அவரது உறவினர் மாரியம்மாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறை வாகியுள்ள வெயிலு முத்துவை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x