Published : 16 Jan 2022 03:10 PM
Last Updated : 16 Jan 2022 03:10 PM
நாமக்கல்: காவல் துறையினர் தாக்கியதால் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் எழுப்பியதையடுத்து சேந்தமங்கலத்தைச் சேர்ந்த இரு எஸ்ஐகள் மற்றும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட மூவரை சேலம் சரக டிஐஜி நஜ்மல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (53). இவர் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் உத்திரவின்படி சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் (35) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி குமாரை கைது செய்த காவல் துறையினர் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அரூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன் (56), சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (45), அவரது மனைவி கம்சலா (45) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த திருட்டில் மூளையாக செயல்பட்ட நடராஜன், அவரது மனைவி லலிதா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையிலும், அவரது மனைவி கம்சலா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில், பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13ம் தேதி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இச்சூழலில் சேந்தமங்கலம் காவல் துறையினர் தாக்கியதால் தான் பிரபாகரன் உயிரிழந்தார். அவர் கை, கால் செயல்படாத மாற்றுத்திறனாளி. மனிதாபிமானமின்றி அவரை காவல் துறையினர் தாக்கியுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிரபாகரன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கலைவாணி ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இசசூழலில் நேற்று சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்மல் ஹோடா உத்திரவின் பேரில் தனிப்படையைச் சேர்ந்த சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன், புதுச்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி
ஆய்வாளர் பூங்கொடி, நல்லிபாளையம் காவல் நிலைய ஏட்டு குழந்தைவேல் ஆகிய மூவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும்,என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT