Last Updated : 09 Jan, 2022 01:57 PM

 

Published : 09 Jan 2022 01:57 PM
Last Updated : 09 Jan 2022 01:57 PM

கரோனா அச்சம் காரணமா? 4 வயதுக் குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட ஜோதிகா

மதுரை: மதுரை அருகே கரோனா அறிகுறியால் விஷம் கொடுத்து 4 வயது மகனைக் கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகில் கல்மேடு பகுதியிலுள்ள எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் லட்சுமி (46). இவரது கணவர் நாகராஜ். இவர்களது மகன்கள் சிபிராஜ் (14), ஆதி (17), மகள் ஜோதிகா (24).

ஜோதிகாவுக்குத் திருமணமாகி ரித்தீஸ் என்ற 4 வயது மகன் இருந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த இவர்கள், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிலைமான் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் 2 நாளுக்கு முன்பு ஜோதிகாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கடந்த 7-ம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று காலை ஜோதிகா, அவரது மகன் ரித்தீஸ், தாய் லட்சுமி, சகோதரர் சிபிராஜ் ஆகியோர் வீட்டில் மயங்கிக் கிடப்பதாகத் தகவல் அறிந்த சிலைமான் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஜோதி, அவரது மகன் ரித்தீஸ் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரின் உடல்கள் மற்றும் லட்சுமி, சிபிராஜ் ஆகியோரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்கள் விஷத்தன்மை கொண்ட சாணி பவுடரைக் கலந்து குடித்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ஏற்கெனவே, ஜோதிகா கணவரைப் பிரிந்த நிலையில், தனது தாயுடன் வசித்துள்ளார். தந்தையும் இறந்ததால் ஜோதி மட்டும் பணிபுரிந்து, குடும்பத்தைக் கவனித்து இருக்கிறார். தனது தம்பி சிபிராஜுக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிரமத்தில் இருந்துள்ளனர்.

ஜோதிகாவுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் குடும்பத்திற்கே கரோனா தொற்று பரவியிருக்கலாம். குடும்பத்தைக் கவனிக்க ஆள் இல்லையே என்ற அச்சத்திலும் நேற்று இரவில் லட்சுமி குடும்பத்தினர் சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. சாணி பவுடரை முதலில் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, பிறகு தாய், மகளும் குடித்து இருக்கலாம். லட்சுமியின் மற்றொரு மகன் ஆதி வெளியில் சென்றிருந்தால் தப்பித்து இருக்கலாம். கரோனா பயமா அல்லது வேறு காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x