Published : 01 Jan 2022 09:03 AM
Last Updated : 01 Jan 2022 09:03 AM

ஆன்லைனில் ரூ.70 லட்சம் பணம் திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டர் கைது: வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

வேலூர்

காட்பாடி வட்டார வளர்ச்சி அலு வலகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் ரூ.70 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் மேச்சேரி பிடிஓ அலுவலக கணினி ஆபரேட்டரை வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளது. இதில், ரூ.70 லட்சம் தொகை திடீரென மாயமானதை கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் அபர்ணா, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், ரூ.70 லட்சம் தொகையில் திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசன் (23) என்பவரது வங்கி கணக்கில் ரூ.50 லட்சம், காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் வங்கியில் பிரபு என்பவரது கணக்கில் ரூ.20 லட்சம் தொகை மாற்றியது தெரிய வந்தது. ஆனால், தனியார் வங்கியின் கணக்குக்கு அந்தப் பணம் வரவு வைக்கப்படாமல் இருந்தது.

இந்த தகவலை அடுத்து பூவரசனை கடந்த நவம்பர் 20-ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், திருப்பத்தூர்ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33) மற்றும் வாணியம்பாடி ராம நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்த சம்பத் என்பவரை தேடி வந்தனர்.

தொடர் விசாரணையில், இந்த நூதன திருட்டில் மூளையாக செயல்பட்ட சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக (பி.டி.ஓ) தற்காலிக கணினி ஆபரேட்டர் மோகன் (24) என்பவரை சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்தான் சம்பத் என பெயரை மாற்றி பூவரசன் தரப்பினருக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். இவர் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி ஆபரேட்டராக பணி யாற்றி வருவதால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணப் பரிமாற்றம் எவ்வாறு நடைபெறும் என்ற விவரங்கள் அனைத்தும் தெரிந்துள்ளது.

எனவே, ஏதாவது ஒரு வட்டார வளர்ச்சி அலுவலக கருவூல கணக்கு எண் இருந்தால் அதை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும், அதற்கான கமிஷன் தொகை தருவதாக பூவரசன் தரப்பினரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கருவூல அடையாள எண், வங்கிக் கணக்கு விவரங்களை மோகனிடம் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டபடி காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக கணக்கில் இருந்து பணத்தை மாற்றிய நிலை யில் புகார் காரணமாக வங்கிகளுக்கு மாற்றப்பட்ட பணத்தை காவல் துறையினர் முடக்கினர். அவர்களால் பணத்தை மொத்த மாக எடுக்க முடியவில்லை. இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதான நிலையில் முக்கிய குற்ற வாளி மோகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x