Published : 31 Dec 2021 02:09 PM
Last Updated : 31 Dec 2021 02:09 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பெண்ணிடம் ஏடிஎம் கார்டை ஏமாற்றி பெற்று பணம் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பர்கூர் அடுத்த பாகிமானூரைச் சேர்ந்தவர் மேகலா (38). மகளிர் சுய உதவிக் குழு தலைவராக உள்ளார். மேகலா தன் தோழி கோகிலா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து வைத்திருந்தார். பின்னர் தனது தேவைக்காக அந்தப் பணத்தை கேட்டார். எனவே, கோகிலா தன் கணவரின் ஏடிஎம் அட்டையை கொடுத்து அதில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி பர்கூரில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பணம் எடுக்க மேகலா சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த 2 இளைஞர்கள் மேகலாவுக்கு உதவி செய்ய தாமாக முன்வந்துள்ளனர். பின்னர் ஏடிஎம்-ல் பணம் இல்லை என்று கூறி அட்டையை மேகலாவிடம் திருப்பி தந்துள்ளனர். சற்று நேரத்துக்கு பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கோகிலாவின் கணவருக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. அதன்பின்னரே, அந்த இளைஞர்கள் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து விட்டு, ஏமாற்றி எடுத்துச் சென்ற ஏடிஎம் அட்டை மூலம் பணம் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக பர்கூர் காவல் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணையில் ஓசூர் வட்டம் மத்திகிரி அடுத்த கொத்தகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மணி (27), மஞ்சுநாத் (33) ஆகியோர் ஏமாற்றி ஏடிஎம் அட்டையை எடுத்துச் சென்று பணம் திருடியது தெரிய வந்தது. எனவே, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT