Published : 31 Dec 2021 02:43 PM
Last Updated : 31 Dec 2021 02:43 PM
குமரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.9 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 77 செல்போன்கள் சைபர் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் எஸ்.பி. பத்ரிநாராயணன் ஒப்படைத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: நடப்பாண்டில் சுமார் ரூ.64 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 540 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஆதாய கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 25 கொலை வழக்குகளில் தொடர்புடைய 48 குற்றவாளிகளும், கொலை முயற்சி தொடர்பாக 78 பேரும், அடிதடி வழக்குகள் தொடர்பாக 334 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் 208 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 703 கிலோ கஞ்சா மற்றும் 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபோல், இந்த ஆண்டில் இதுவரை 768 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 772 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3,125 கிலோ குட்கா மற்றும் ரூபாய் 38 லட்சத்து 43 ஆயிரம், 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 93 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை தொடர்பாக 229 வழக்குகளின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 49 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தொடர் அடிதடியில் ஈடுபட்ட 25 பேரும், போதை பொருட்களை விற்பனை செய்த 15 பேரும், பாலியல் தொடர்பான குற்றவாளிகள் 5 பேரும், திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேரும், சாராயம் விற்பனை செய்த ஒருவரும் அடங்குவர். இந்த ஆண்டில் இதுவரை 1,901 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் அதிக பாரத்துடன் விதிமுறைகளை மீறி கனிம வளங்களை ஏற்றி சென்ற 438 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 5,890 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 71 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT