Published : 30 Dec 2021 07:28 AM
Last Updated : 30 Dec 2021 07:28 AM
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ளஅரசு கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஆகியவற்றில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் மின்சார ரயில்களில் பயணித்து கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். அந்த இரு கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், சேப்பாக்கம் கல்லூரியில் முதுகலை முதலாம்ஆண்டு படித்து வந்த, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டையை சேர்ந்த குமார்(20), வழக்கம் போல் நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, மாலையில் மின்சாரரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ரயிலில் திருநின்றவூர் அருகே சென்றபோது, அரசு உதவி பெறும் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமாரை கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குமார், திருநின்றவூரில் ரயிலில் இருந்து கீழே இறங்கி, அங்கு நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். இரவு 8.40 மணியளவில், பெங்களூருவில் இருந்து, சென்னை நோக்கிச் சென்ற விரைவுரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்துக்கு முன்பு குமார், தன் கல்லூரி நண்பர்கள் இடம் பெற்றுள்ள வாட்ஸ்- அப் குழுவுக்கு செல்போனில் பேசி ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடம் விரைந்து, குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், குமார் படித்த கல்லூரி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குமாரின் தற்கொலைக்குக் காரணமான சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனர்.
திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீஸார், மாணவர்களைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். தொடர்ந்து, குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட 2 கல்லூரிகள் முன்பும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT